இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது. ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது. ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும் இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது. அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.